மகசூலை அதிகப்படுத்த பசுந்தாள் உரம்

கோவை, மே 25:விவசாயிகள் பயிர்களுக்கு பசுந்தாள் உரத்தை பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறமுடியும் என்று வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சுல்தான்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் கூறியதாவது: பசுந்தாள் உரம் எனபது பயறு வகைகளை பயிரிட்டு பின் போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணை உழுவதால் கிடைக்கும் உரமாகும். கோடை மழையை பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடலாம்.

இதன் மூலம் ஆனி, ஆடி மாதங்களில் சாகுபடி செய்ய பயிர்களுக்கு தேவையான இயற்கை உரம் எளிதாக கிடைக்கும். பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு (அ) தட்டைப்பயிறு ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் விதைக்கவேண்டும். அதை பூ பூக்கும் பருவம் வரை வளர விட்டு அதன் பின் அதனை மண்ணுடன் சேர்த்து மடக்கி உழுது விட வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணில் இடுவதால் மண்வளம் மற்றும் மண் அமைப்பை மேம்படுத்தும். நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும்.

மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பை குறைக்கும். இதன் மூலம் ஏக்கருக்கு 30 லிருந்து 70 கிலோ வரை தழைச்சத்து கிடைக்கிறது. பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணுக்குள் மடக்கி உழுவதால், மண்ணின் நீர்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. களிமண் பாங்கான நிலங்களில் காற்றோட்டத்தை ஏற்படுத்தி நல்ல வடிகால் வசதியையும் ஏற்படுத்தி தருகிறது.

கோடை காலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம், மண் போர்வை போல செயல்பட்டு நீர் ஆவியாவதை தடுக்கிறது. பயிர் சுழற்சி முறையில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வதால் பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களின் சுழற்சியில் இடையூறு விளைவிக்கும். எனவே விவசாயிகள் பசுந்தாள் உரத்தினை பயன்படுத்தி மண்வளத்தை அதிகரித்து அதிக மகசூல் பெறலாம்.

Related Stories: