தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 75 ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

திண்டுக்கல், மே 23: திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 75 ஆசிரியர்களுக்கு தேர்வு பயிற்சி வகுப்பு துவங்கியது.

மத்திய அரசு அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண் டுவந்தது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற உத்தரவிட்டது. இதையடுத்து 2010ம் ஆண்டிற்கு பின்பு, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிப்பு வெளியானது.

இதற்கு 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை காலகெடு வழங்கப்பட்டது. பின்னர் அந்த காலக்கெடு இந்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதினர். இதில் பலர் தேர்ச்சி பெற்றனர். எனினும் மாநிலம் முழுவதும் 1,500 பேர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இந்நிலையில் அடுத்த மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது. இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், அந்த தகுதி தேர்வை எழுத தயாராகி வருகின்றனர். இதையொட்டி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விற்கு பயிற்சி அளிக்கும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 75 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மொத்தம் 10 நாட்கள் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: