மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிக்க குழு

திண்டுக்கல், மே 23: திண்டுக்கல் நகரில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் வீடுகளை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்கு ஆத்தூர் காமாஜர் நீர்த்தேக்கம் மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. காமராஜர் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் ஜீரோ நிலைக்கு சென்று விட்டதால் அங்கு கிடைக்கும் குறைந்தளவு நீரை எடுத்து விநியோகம் செய்ய வேண்டிய நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது.

இதனால் தற்போதைக்கு காவிரி கூட்டுக்குடிநீர் மட்டுமே கைகொடுக்கும் நிலையில் உள்ளது. காவிரி குடிநீரும் அவ்வப்போது மின்தடை, பகிர்மான குழாயில் உடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் விநியோகிக்க முடியாத சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தேர்தல் நேரத்தில் தினமும் குடிநீர் சப்ளை செய்த மாநகரட்சி நிர்வாகம் தற்போது வாரம் ஒருமுறையும், சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறையும் என சப்ளை செய்கிறது.

மேலும் ஜிக்கா திட்ட புதிய பைப் லைனால் பல இடங்களில் குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு படும்பாடு பரிதாபமாக உள்ளது. மேலும் குடிநீர் கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தல் மற்றும் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள சில வீடுகளில் குடிநீரை மின்மோட்டார் மூலம் திருடி வருகின்றனர். இது குடிநீர் தட்டுப்பாட்டை மேலும் அதிகப்படுத்துதுவதாக உள்ளது.

 

ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் மின்மோட்டார் வைத்து குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் இது தொடர்கதையாக இருந்தது. இதனால் திறந்து விட்ட சில நிமிடங்களில் மின்மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் பல இடங்களில் தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுபவர்களை கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் தெருக்களில் தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் கண்காணித்த போது 45 வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவது தெரிந்தது. இதையடுத்து குழுவினர் 45 மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட வீடுகளில் குடிநீருக்கான புதிய டெபாசிட் தொகையை செலுத்தினால்தான் மோட்டார் திருப்பி வழங்கப்படும், இல்லையெனில் மோட்டார் ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: