பந்தலூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி

பந்தலூர், மே 23: பந்தலூர் அருகே பாட்டவயல் காரக்குன்னி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(45). இவர் பாட்டவயல் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்கிறார். வேலை முடிந்து நேற்று முன்தினம் இரவு வீடு செல்லும்போது அருகில் இருந்த காபி தோட்டத்தில் இருந்து யானை ஒன்று அவரை தாக்கியுள்ளது. அதில் அவர் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து யானையை விரட்டினர். இதுகுறித்து பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் பிதர்காடு வனசரகர் மனோகரன் வனகாப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் பாலகிருஷ்ணனை கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேல் சிகிச்சைக்காக கள்ளிக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாலகிருஷ்ணன் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று காலை பொதுமக்கள் திரண்டு யானைகள் மனிதர்களை தாக்கி வருவதை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என பாட்டவயல் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவஇடத்திற்கு தேவாலா டிஎஸ்பி ராமச்சந்திரன், உள்ளிட்ட அதிகாரிகள் சென்று பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். இதையடுத்து கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார்.

இது ெதாடர்பாக பொதுமக்கள் கூறுகையில், பாட்டவயல் பகுதியில் ஏற்கனவே வனத்துறை சார்பில் வெட்டிய அகழி தற்போது முற்புதர்கள் சூழ்ந்துள்ளது. இதனால், யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது. அகழியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருவிளக்குகள் எரிவதில்லை அதனை பராமரிக்க வேண்டும், வனத்துறையினர் அவுட்போஸ்ட் அமைத்து யானைகளை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

Related Stories: