அவனியாபுரத்தில் கழிவுநீர் குளமான ஊருணி

அவனியாபுரம், மே 23: அவனியாபுரத்தில் கழிவுநீர் குளமாக மாறி வரும் ஊருணியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை அவனியாபுரத்தில் காவல்நிலையம் அருகே, மாநகராட்சி 94வது வார்டில் நல்லதங்காள் ஊருணி உள்ளது. திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயிலிருந்து அவனியாபுரம் பகுதி விளைநிலங்களுக்கு பாசனத்திற்காக திறக்கப்படும் நீர், திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் சாலையில் உள்ள இந்த ஊரணியில் வந்து சேகரமாகும். இதனால், நிலத்தடி நீர் உயர்ந்து பொதுமக்களின் குடிநீருக்கும் பயன்பட்டு வந்தது. பாசன பகுதிகள் குறைந்ததும் இந்த ஊருணியின் நீர்வரத்து வழிகள் ஆக்ரமிக்கப்பட்டு நீர்வரத்து நின்றது.

மழை காலங்களில் கண்மாயில் மழைநீர் தேங்கியபோது, அதில் மீன் வளர்த்து, அவனியாபுரம் நகராட்சியாக இருந்தபோது, அதற்கு வருவாய் கிடைத்தது. தற்பொழுது மீன் வளர்ப்பு இல்லாததால், அப்பகுதி குடியிருப்புகளில் வெளியேறும் கழிவுநீர் ஊருணியில் தேங்குகிறது. பிளாஸ்டிக் குப்பைகள் ஊருணியில் கொட்டப்படுகிறது. மேலும், கொசுக்களின் உற்பத்திக் கூடாரமாக மாறி வருகிறது. இப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு சிக்குன்குனியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. மாநகராட்சியில் அவனியாபுரம் இணைக்கப்பட்டாலும், பாதாளச் சாக்கடை வசதியில்லை. இதனால், ஊருணி கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறி வருகிறது. எனவே, ஊருணியை சீரமைத்து, கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், குப்பை கொட்டாமல் இருக்கவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: