வாடிப்பட்டியில் சர்க்கரை நோயாளிகளுக்கு ‘கசக்கும்’ ஜி.ஹெச்

வாடிப்பட்டி, மே 23: வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரை கிடைப்பதில்லை என புகார் தெரிவித்துள்ளனர். வாடிப்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனை, பஸ்நிலையத்தின் உட்புறம் அமைந்துள்ளது. இங்கு வாடிப்பட்டி, செமினிப்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைக்கட்டி, பெருமாள்பட்டி, கரட்டுப்பட்டி, சள்ளக்குளம், வடுகபட்டி, ஆண்டிபட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சடையம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட நோயாளிகள், தினசரி சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இதில், 100 பேராவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர். இவர்கள் நோயின் தன்மைக்கு ஏற்ப, தினசரி மாத்திரை உட்கொள்ள வேண்டும். இவர்களுக்கு வாரம் அல்லது மாதம் ஒருமுறை மாத்திரை மொத்தமாக வழங்கப்படும். ஆனால், சமீபகாலமாக மருத்துவமனையில் சர்க்கரை நோய் மாத்திரைகள் வழங்குவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். மாத்திரைகளை வெளியில் தனியார் மருந்துக்கடைகளில் வாங்குமாறு நோயாளிகளை அறிவுறுத்துகின்றனர்.

ஆனால், அரசு மருத்துவமனைக்கு ஏழை நோயாளிகள்தான் பெரும்பாலும் வருகை தருகின்றனர். அவர்கள் காசு கொடுத்து வாங்க முடிவதில்லை. இதனால், பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் உரிய சிகிச்சை எடுக்காமல் அவதிப்படுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: