திருச்சியில் வெற்றி வாகை சூடப்போவது யார்?

î வேட்பாளர்கள், கட்சியினர் பரபரப்புடன் எதிர்பார்ப்பு

î பலத்த பாதுகாப்புடன் இன்று ஓட்டு எண்ணிக்கை

திருச்சி, மே 23:  திருச்சி மக்களைவை தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார்? என்ற பரபரப்பில் வேட்பாளர்களும், கட்சியினரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். பலத்த பாதுகாப்புடன் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்ததால் வேலூர் நீங்கலாக 38 மக்களவை  தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தமிழகத்தில் 2ம் கட்டமாக ஏப்.18ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட ரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருச்சி மக்களவை தொகுதியில் 7,39,843 ஆண்கள், 7,68,972 பெண்கள், 148 திருநங்கைகள் என 15 லட்சத்து 8,963 வாக்காளர்கள் உள்ளனர்.திமுக கூட்டணியில் காங்கிரஸ் திருநாவுக்கரசர், அதிமுக கூட்டணியில் தேமுதிக டாக்டர் இளங்கோவன், அமமுக சாருபாலா, மக்கள் நீதி மய்யம் ஆனந்தராஜா உள்பட 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 10 லட்சத்து 37 ஆயிரத்து 750 பேர் வாக்களித்தனர். 68.80 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. ஓட்டுகள் பதிவான எலக்ட்ரானிக் ஓட்டு மிஷின்கள் அனைத்தும் ஓட்டு எண்ணிக்கை மையமான பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் உள்ள 6 பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீலிடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

 திருச்சி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, சாரநாதன் கல்லூரியில் சட்டசபை தொகுதி வாரியாக 6 தனித்தனி அறைகளில் காலை 8 மணிக்கு துவங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். பின் ஓட்டு மிஷின்கள் உள்ள அறைகள் சீல் அகற்றப்பட்டு மிஷின்கள் எடுத்து வரப்பட்டு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். ஓட்டு எண்ணிக்கைக்காக, ஒவ்வொரு அறையிலும் 14 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேபிளிலும் ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், நுண் மேற்பார்வையாளர், உதவியாளர் என 3 பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை பணியில் 288 மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள் (கூடுதல் பணியாளர் உள்பட) ஈடுபடுகின்றனர்.

ரங்கம் தொகுதியில் 25, திருச்சி மேற்கில் 20, திருச்சி கிழக்கில் 19, திருவெறும்பூரில் 21, கந்தர்வக்கோட்டை 17, புதுக்கோட்டை 19 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் டேபிளில் வெப் கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.ஓட்டு எண்ணும் ஒவ்வொரு அறையிலும் 16 கண்காணிப்பு கேமராக்கள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 96 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  ஓட்டு எண்ணிக்கையை வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் தனி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 விவிபேட் (வாக்களித்ததை உறுதி செய்யும்) கருவிகளில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். இதற்காக தனி பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், முகவர்கள் உள்ளிட்டோர் காலை 6 மணிக்கு வரவும், அலுவலர்கள் காலை 7.30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணும் மையமான சாரநாதன் கல்லூரி வளாகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனைக்கு பிறகே வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓட்டு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களிலேயே முன்னணி நிலவரமும், இரவு முழு முடிவும் தெரியவரும். ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு வெளியூர் சுற்றுலா சென்ற வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் திருச்சிக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். திருச்சி தொகுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என திருச்சி வாக்காளர்கள், அரசியல் கட்சியினர், போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முடிவுகள் இன்று இரவுக்குள் தெரிய வரும்.

Related Stories: