முத்துப்பேட்டை அருகே பல்லாங்குழியாக மாறிய சாலை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

முத்துப்பேட்டை, மே 23: முத்துப்பேட்டை- கரையங்காடு சாலை பல்லாங்குழியாக மாறியதால் வாகனங்கள் செல்ல முடியாததால் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையிலிருந்து கரையங்காடு வரை உள்ள வேதாரண்யம் சாலை சுமார் 15ஆணடுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையாகும். தற்போது சாலையின் ஜல்லிகப்பிகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக தில்லைவிளாகத்திலிருந்து விலாங்காடு, கரையங்காடு  கிராமம் வரை உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பல்லாங்குழி போன்று படும்மோசமாக உள்ளது.இதனால் வேதாரண்யத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் அங்கிருந்து முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டைக்கு செல்லும் பேருந்துகளுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமல் மாட்டுவண்டிபோல் மெதுவாக செல்வதால் காலதாமதமாகிறது. மேலும் அப்பகுதியில் செல்லும் வாகனங்களும் சாலை பள்ளங்களில் விழுந்து  விபத்துக்குள்ளாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இருச்சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் தடுமாறி விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சாலையில்  தனியார் கல்லூரி மற்றும் அரசு பள்ளிகள்  உள்ளதால் அங்கு செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையை  இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஒன்றிய நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் கண்டுக் கொள்ளவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும்  ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போது கோரிக்கை விடுத்தும் சாலை சீரமைக்கப்படாததால் சாலை சீரமைக்கப்படுமா? அல்லது இதே நிலைதானா? என்ற கேள்விகுறியில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.

இது குறித்து கற்பகநாதர்குளம் கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் சாமிதுரை கூறுகையில், முத்துப்பேட்டை பகுதியில் அதிகளவில்  பேருந்து மற்றும் வாகன போக்குவரத்து நிறைந்த பகுதி என்றால் முத்துப்பேட்டை முதல் வேதாரண்யம் வரையிலான வழிதடம்தான். இதில்  தில்லைவிளாகம் முதல் கரையங்காடு வரையிலான இந்த சாலை குண்டும் குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல வகையில் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனை சீரமைக்க இதுவரை ஆளுங்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் அரசு அதிகாரிகளும் நெடுஞ்சாலை துறையினரும் கண்டும் காணாமல் உள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முனைப்புகாட்டி சாலையை சீரமைக்க முன்வரவேண்டும். இல்லையேல் இப்பகுதியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.

Related Stories: