கூத்தாநல்லூர் ரஹ்மானியார் தெருவில் கொசுக்கள் கூடமாக மாறியஅஞ்சுக்கேணி குளம் தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

கூத்தாநல்லூர், மே 23: கூத்தாநல்லூர் ரஹ்மானியாதெருவில் உள்ள அஞ்சுகேணி குளத்தில் குப்பை, கூளங்கள் நிரம்பி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளதால் குளத்தை தூர்வாரி சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவர்களும்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏழுக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. கூத்தாநல்லூர் பகுதி மக்கள் அனைவரும் குளிக்கவும், குடி நீருக்கும் பயன்படுத்திய அந்த குளங்களில் அனைத்துமே தற்போது குப்பை கூளங்கள் நிறைந்தும், அமலைச்செடிகள் ஆக்கிரமித்தும் பயன்பாட்டிற்கு வழியில்லாமல் கிடக்கின்றன. தற்போது நகராட்சி நிர்வாகத்தில் இந்த குளங்களை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என்பதே கூத்தாநல்லூர் பகுதிவாழ் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

குறிப்பாக கூத்தாநல்லூர் பகுதிகளில் குடிசைகள் நிறைந்த ரஹ்மானியாத்தெரு பகுதியில் அமைந்திருக்கும் அஞ்சுக்கேணி குளம் முற்றிலும் குப்பைகளால் நிறைந்தும், கஜா புயலால் அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் நிறைந்தும் காணப்படுகிறது. மேலும் இந்த குப்பைகள் தண்ணீரில் அழுகி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தும் நிலை உள்ளது.குளத்தை சுற்றி வளர்ந்திருக்கும் விஷத்தன்மை கொண்ட சீமைக்காட்டமணி எனும் செடி வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்துள்ளது.     இந்த குளத்தின் கரையில்தான் கூத்தாநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது.  அஞ்சுக்கேணி குளம் முற்றிலும் வீணாகி கிடப்பதுடன் நோய் பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் மாறியுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் நலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக அஞ்சுக்கேணி குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன், குளத்தில் வளர்ந்திருக்கும் சீமைக்காட்டாமணி செடிகளையும் ஒழிக்க வேண்டும் என பொதுமக்களும், பள்ளி மாணவர்களும்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: