இலவச நோட்டு, புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவு

சேலம், மே.23: தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், இலவச நோட்டு, புத்தகங்கள் உள்பட 16 வகையான இலவச பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவை பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு, 2, 3, 4, 5, 7, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இவற்றை பெற்று மாணவர்களுக்கு விநியோகிப்பது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை, அனைத்து சிஇஓக்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: விலையில்லா பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் இலவச பொருட்கள் தேவையான எண்ணிக்கையில், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகிறது. இவற்றை வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக தனியார் வாகனம் மூலம் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தலைமை ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க அறிவுறுத்த வேண்டும்.  பாடப்புத்தகங்கள் தேவையான எண்ணிக்கையில் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

குறையும் பட்சத்தில் மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு, பள்ளி திறப்பிற்கு முன்னதாகவே அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும். பெறப்பட்ட பொருட்களை, பள்ளி திறக்கும் நாளான ஜூன் 3ம் தேதியே மாணவர்களுக்கு விநியோகிக்க, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும். வரும் 30ம் தேதிக்குள், விலையில்லா பொருட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சென்றடைந்த விவரத்தை, சிஇஓக்கள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories: