தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிந்த வழக்கு தள்ளுபடி கும்பகோணம் கோர்ட் உத்தரவு

கும்பகோணம், மே 23: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து சாலை  மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கும்பகோணம் கோர்ட் உத்தரவிட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களில் 15க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஏராளமானோர் பலியாகினர்.இதை கண்டித்து கடந்தாண்டு மே 22ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடந்தை ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்  நாகராஜன்,  ஒன்றியக்குழு உறுப்பினர் நாகமுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் தமிழினியன் உள்ளிட்டோர் பங்கேற்று தேவனாஞ்சேரி கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டம் தொடர்பாக சுவாமிமலை போலீசார் பல்வேறு பிரிவின்கீழ் 9 பேர் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை, கும்பகோணம் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்து நீதிபதி கோதண்டராஜ் உத்தரவிட்டார்.

Related Stories: