வைகாசி விசாகத்தையொட்டி தஞ்சையில் முத்து பல்லக்கு விழா

தஞ்சை, மே 23: வைகாசி விசாகத்தையொட்டி தஞ்சையில் முத்து பல்லக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சையில் திருஞானசம்பந்தர் குருபூஜைக்காக ஆண்டுதோறும் வைகாசி மாதம் முத்துப்பல்லக்கு விழா நடந்தது. தஞ்சை மற்றும் சுற்றியுள்ள 18 கோயில்களில் இருந்து விநாயகர், முருகன் உற்சவ மூர்த்தியுடன், திருஞானசம்பந்தர் உருவப்படத்துடன் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்குகள், தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்கு வீதிகளில் உலா வந்தன.

நள்ளிரவு முதல் விடிய விடிய சுவாமி ஊர்வலங்கள் நடந்தது. கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோயில் அருகில் சுவாமிகளுக்கு பூ போடும் நிகழ்ச்சி நடந்தது.முத்துப்பல்லக்கு விழாவை காண தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் தஞ்சையின் 4 ராஜவீதிகளில் குவிந்தனர். முத்து பல்லக்கு விழாவையொட்டி தஞ்சை நகரில் விடிய விடிய தெருவோர கடைகளில் படுஜோராக விற்பனை நடந்தன.

Related Stories: