கும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் தயாரிப்பு பணி மும்முரம் விற்பனை படுஜோர்

கும்பகோணம், மே 23: கோடை காலத்தையொட்டி கும்பகோணம் பகுதியில் மண் பானை, பிரிட்ஜ் மற்றும் பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகி-்ன்றனர்.கோடை காலத்தை சமாளிக்கவும், கடும் வெப்பத்தால் உடல்கள் உஷ்ணம் அடைவதால் குளிர்ந்த தண்ணீர் மற்றும் இயற்கையாக உள்ள பாத்திரங்களில உள்ள தண்ணீர் மற்றும் உணவுகளை சமைக்க வேண்டுமென டாக்டர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கும்பகோணம் அடுத்த மாத்தி பகுதியில் இயற்கை உணவுகளுக்காகவும், மண் பானைகள், நீர் அருந்துவதற்கான  மண் டம்பளர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பானைகள் உள்ளிட்ட பொருட்களை செய்வதற்கு போதுமான மண் எடுப்பதற்கு அனுமதியில்லாததால் அருகில் உள்ள கோயில் குளத்திலிருந்து அதிக விலைக்கு வாங்கி வநது மண்பாண்ட பொருட்களை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். போதிய மண் கிடைக்காததாலும், மண் எடுப்பதற்கு அனுமதி வழங்காததாலும் தற்போது மண்பாண்ட தொழிலாளா-்களின் வாழ்க்கை அழிந்து வருகிறது. எனவே மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வை உயர்த்தும் வகையிலும், தொழிலை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாத்தி பகுதியை சோ்ந்த கண்ணன் கூறுகையில், தமிழகத்தில் ஆறு, வாய்க்காலகளில் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால்,  கோடை வெயிலின்  தாக்கம் அதிகமாகியுள்ளது. இயற்கை உணவு, இயற்கை பாத்திரங்களை பயன்படுத்தி வந்தால் உடல் உபாதைகளிலிருந்து விடுபடலாம் என்று முன்னோர்கள் கூறுவர். இதையடுத்து மண்ணால் கப், ஜார், தண்ணீர் பானைகள் தயாரித்து வருகிறோம்.வெயில் காலத்தில் மண்பானையில் குடிநீர் குடித்து வந்தால் உடல் உஷ்ணங்கள் குறையும் என்று ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர். மேலும் நாங்கள் வெயில் காலத்தில் உணவுகளை இயற்கையாகவும், உணவுகளின் தன்மை மாறாமலும் பாதுகாக்கும் வகையில் மண்ணாலான பிரிட்ஜ் தயாரிக்கிறோம்.இதில் மூன்று மண்பானைகள் அடுக்குகள்போல் இருக்கும். அதில் பெரியளவில் உள்ளதற்குள் சிறிய மண் பாத்திரத்தை வைத்து மேலே கூம்பு வடிவிலான மூடி போட்டு மூடிவிட வேண்டும். பின் பெரிய பாத்திரத்தில் ஒரத்தில் துளை வழியாக தேவையான அளவு தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும். இந்த மண்ணால் செய்யப்பட்ட பிரிட்ஜில் இட்லி மாவு மற்றும் உணவு பொருட்களை வைத்தால் 3 நாட்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும். காய்கறிகள் மற்றும் பழவகைகளை வைத்தால் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த பிரிட்ஜ் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மண்ணால் ஜார் பைப் வைத்தது ரூ.300 முதல் 400 வரையிலும், இட்லி பானை ரூ.400, குடுவை, தயிர் கப், ஜூஸ் கப், பணியாரம் சட்டி, ஆப்ப சட்டிகள்  தலா ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பிரிட்ஜ், இட்லி பானைகள், குடுவைகள், கப்புகள் ஆகியவை சென்னை, கேரளா, புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம். ஆனால் தரைக்கு அடியில் மண்ணை எடுக்ககூடாது என்று அரசின் உத்தரவு இருப்பதால் மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. இதனால் மண் கிடைக்காமல் குளங்களில் உள்ள மண்ணை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து மண்ணால் பாத்திரங்களை செய்து வருகிறோம்.எனவே கோடை காலத்துக்கு உகந்த பாத்திரமான மண்பாண்டங்களை தயாரிக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்க, உதவி தொகையும், மண் எடுப்பதற்கு அங்கீகாரமும் வழங்கினால் தான், இனி வருங்காலத்தில் மண்பாண்ட தொழில் நலிவடையாமல் இருக்கும். எனவே உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மண்பாண்ட தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும் என்றார்.

 

Related Stories: