கொல்லிமலையில் ₹1.25 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் தீவிரம்

சேந்தமங்கலம், மே 23:  கொல்லிமலை சோளக்காட்டில் ₹1.25 கோடியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளது.  இதிலுள்ள 305 கிராமங்களில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள செம்மேடு, பவர்காடு, தேனூர்பட்டி ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், 16 இடங்களில் துணை சுகாதார நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கொல்லிமலை மலைவாழ் மக்கள் உயர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமானால், நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இப்பகுதி மக்கள் செம்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்ந்த வேண்டும் என  நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாழவந்திநாடு, செம்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, இங்கு அறுவை அரங்கம், இசிஜி, விஷமுறிவு மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்டு வரப்பட்டது.

இதனிடையே, இங்கு செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சோளக்காட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, தற்காலிமாக எல்லைக்கிராய் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. சோளங்காடு சந்தை அருகே ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, ₹1.25 கோடி மதிப்பில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், படுக்கை வசதி அறை, அறுவை அரங்கம், மருத்துவர் பரிசோதனை அறை, மருந்தகம், அலுவலர்கள் குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: