அனுமதியின்றி எருதுகட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடத்திய 21 பேர் மீது வழக்குப்பதிவு

சிங்கம்புணரி/திருப்புத்தூர், மே 23: சிங்கம்புணரி அருகே காளாப்பூர் இளங்கமுடைய அய்யனார், பாலாறு காத்த அய்யனார் மற்றும் வடக்குவாசல் செல்வி அம்மன்  கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் எருது விடும் விழா நடைபெற்றது.  அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெற்றதாக விஏஓ கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பெயரில் சேவுகப்பெருமாள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதியப்பப்பட்டது. எஸ்.வி.மங்கலத்தில் கூந்தல் உடைய அய்யனார் கோவில் வைகாசி புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெற்றது.

இது தொடர்பாக விஏஓ சிவா கொடுத்த புகாரின் பேரில் சேவுகன்சாமியாடி உள்ளிட்ட 5 பேர் மீதும் எஸ்வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருப்புத்தூர் அருகே ஆலங்குடி மதகடி நாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. அனுமதியின்றி பந்தயம் நடத்தியதாக ஆலங்குடி விஏஓ மணிகண்டன் நாச்சியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ஆலங்குடியை சேர்ந்த சரவணன், செல்வராஜ், பாண்டியன், மெய்யப்பன், பெரியய்யா ஆகிய 5 பேர் மீதும், மாட்டுவண்டிகளை கொண்டுவந்து பந்தயத்தில் பங்கேற்ற சுப்பையா, தண்டாயுதபாணி, முத்து, ஆறுமுகம், செல்வம், கோபால் ஆகிய 6 பேர் மீதும் நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: