விடுதிகளாக மாறும் வீடுகள் குற்றங்கள் நடக்க வாய்ப்பு சமூக ஆர்வலர்கள் புகார்

காரைக்குடி, மே 23: காரைக்குடி பகுதியில் அரசு விதிகளை கண்டுகொள்ளாமல் தனியார் விடுதிகள் புற்றீசலாய் துவங்கப்படுவது அதிகரித்துவருகிறது. தனியார் விடுதிகளை பொறுத்தவரை  உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே விடுதி மற்றும் காப்பகங்கள் செயல்பட வேண்டும்.  பெண்கள் தங்கும் அமைவிடமாக இருந்தால் தனித்தனியே கட்டிடங்கள் அமைய வேண்டும். ஆண் மற்றும் பெண் குழந்தைகள் ஒரே கட்டிடத்தில் தங்க நேர்ந்தால், தனித்தனி அறைகளில் தங்க வைக்க வேண்டும். விடுதி காப்பாளர் மற்றும் பொறுப்பாளராக பெண்களை நியமிக்க வேண்டும். 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதி காப்பாளர் இருக்க வேண்டும். விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாவலர் பணியில் இருக்க வேண்டும். வாசல்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். விடுதியில் தங்கியிருப்போர், தூங்க செல்வதற்கு முன்பு கணக்கெடுக்க வேண்டும்.

பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலர்களை மட்டும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், வரவேற்பறையில் மட்டும் பார்க்க அனுமதிக்க வேண்டும். விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாவலருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களின் போன் எண் மற்றும் முகவரி, காப்பகத்தின் முன் வாயிலில் வைக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. காரைக்குடி பகுதியை பொறுத்தவரை அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரி அதிக அளவில் உள்ளன. இங்கு ராமநாதபுரம், புதுக்கோட்டை, பரமக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் அதிக அளவில் வந்து படிக்கின்றனர்.

இவர்கள் தங்குவதற்கு என அதிக அளவிலான தங்கும் விடுதிகள் புற்றீசல்போல் துவங்கப்பட்டுள்ளன. இங்கு அரசு விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படுவது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஒருசிலர் வீடுகள், மாடி பகுதியில் கொட்டகை அமைத்து விடுதிகளாக நடத்தி வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முறையான வசதிகளோ இல்லை. அதிகஅளவில் வாடகை கிடைப்பதால் சிலர் வீடுகளையே விடுதிகளாக மாற்றி வருகின்றனர். பல்கலைக்கழகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் சிலர் வீடுகளை விடுதிகளாக மாற்றி வருமானம் பார்த்து வருகின்றனர். இங்கு போதிய பாதுகாப்பு வசதியில்லாமல் உள்ளதால் குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: