முன்பருவ விதைப்புக்கு ஏதுவாக கோடை உழவு செய்ய வேண்டும்

தேன்கனிக்கோட்டை, மே 23:  முன்பருவ விதைப்புக்கு ஏதுவாக கோடை உழவை விவசாயிகள் செய்ய வேண்டும் என தளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் கூறியதாவது: கோடை மழையை பயன்படுத்தி, தரிசாக இருக்கும் நிலத்தில் மானாவாரி பயிர்களான எள், பயறு வகைகள், சிறுதானியம் போன்றவற்றை சாகுபடி செய்ய வேண்டும். கோடை உழவு செய்வதால் முன்பருவ விதைப்புக்கு ஏதுவாக இருக்கும். மேலும், மண்ணில் உள்ள பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் வெளியே வரும் போது, அவை வெயில்பட்டு அழிந்து விடும். நன்கு ஆழமாக உழவு செய்து கீழ்மண் மேலாகவும், மேல்மண் கீழாகவும் மாறும்போது மண்ணில் உள்ள சத்துக்களை, பயிர்களால் சீராக எடுத்துக்கொள்ள முடியும். கோடை உழவு செய்யும் போது காற்றோட்டம் அதிகரித்து, மண்ணின் இறுக்கம் குறையும். மேலும், மண்ணில் உள்ள களைகளின் விதைகள் முளைத்து திரும்பவும் உழவுசெய்யும் போது, அதிகமான களைகள் வருவதை தவிர்த்து, மண்ணில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம். எனவே, அனைத்து விவசாயிகளும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: