இருமத்தூர் மஞ்சமேடு மாதேஸ்வரன் கோயில் வருவாயை தனியாரிடமிருந்து மீட்க வேண்டும்

கிருஷ்ணகிரி, மே 23:  கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: போச்சம்பள்ளி தாலுகா, இருமத்தூர் மஞ்சமேடு பகுதியில் மாதேஸ்வரன் கோயில் பரிகார ஸ்தலமாக உள்ளது. இந்த கோயிலின் தக்காராக அரூர் பகுதி ஆய்வாளர் இருந்து வருகிறார். இந்த கோயிலுக்கு பரிகாரம் செய்வதற்கு, பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களிடம் பஸ், கார் மற்றும் டூவீலர்கள் நிறுத்துவதற்கான கட்டணம் தனிநபரால் வசூல் செய்யப்படுகிறது. அதேபோல், கோயிலுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட கடைகளின் வாடகை வசூல் செய்வதோடு, 6 உண்டியல்கள் வைத்து, அதில் வரும் வருவாய் முதற்கொண்டு, வருடத்திற்கு ₹32 லட்சம் வரை தனிநபர்களால் ஏலம் விடப்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து புகைப்பட ஆதாரத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, கடிதம் மூலம் ஆணையருக்கு நேரடியாக புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த கோயிலில் வைக்கப்பட்டுள்ள 6 உண்டியலுக்கு இலாகா முத்திரை இடுவதோடு, வாகனம் மற்றும் கடை வசூலை இந்து சமய அறிலையத்துறை மூலம் டெண்டர் விட்டால், ஆண்டு வருவாய் ₹40 லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும். எனவே, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இந்த கோயில் வருவாயை தனியாரிடமிருந்து மீட்டு, கோயில் கணக்கில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: