கடத்தூர் பகுதியில் கடும் வறட்சி செடியிலேயே வாடி வதங்கும் தக்காளி

கடத்தூர், மே  23: கடத்தூர் பகுதியில், வறட்சியால் செடியிலேயே வாடி வதங்கும் தக்காளிகளை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல், தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் தக்காளி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி, கோடை மற்றும் வறட்சியால் செடியிலேயே வாடி வதங்கி வருகிறது. இதனால், வேதனை அடைந்த விவசாயிகள், தக்காளி பழங்களை பறிக்காமல், செடியிலேயே விட்டுள்ளனர். இது பற்றி விவசாயிகள் கூறுகையில், ‘மழையின்மை மற்றும் கோடையால் நீராதாரம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அனைத்து பயிர்களும் காய்ந்துள்ளது. ஓரளவு விளைச்சல் கிடைக்கும் என தக்காளி பயிரிட்டோம். ஆனால், கடும் வறட்சியால் நீர்பாய்ச்ச முடியாமல், தக்காளி செடிகளிலேயே வாடி வதங்கி வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கினால் உதவியாக இருக்கும்,’ என்றனர்.

Related Stories: