இன்று காலையில் ஓட்டு எண்ணிக்கை தேனி தொகுதி யாருக்கு?

தேனி, மே 23: தேனி மக்களவை தொகுதி மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்க உள்ளது. யார் வெற்றி பெறுவார்கள் என்று வாக்காளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. தேனி மக்களவை தொகுதிக்கான பொதுத் தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்.18ம் தேதி நடந்தது. இதில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 67க்கும், பெரியகுளம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197க்கும் கடந்த மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது.

தேனி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்  விகேஎஸ்.இளங்கோவனும், பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக சார்பில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 31 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும், அமமுக சார்பில் வக்கீல் ஜெயக்குமார் உள்பட 16 பேரும் போட்டியிடுகின்றனர். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக சரவணக்குமாரும், பாஜக தலைமையிலான கூட்டணயில் அதிமுக சார்பில் மயில்வேலும், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏவான டாக்டர்.கதிர்காமு உள்பட 13 பேரும் போட்டியிடுகின்றனர்.

தேனி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும். இதன்மூலம் தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கியே தீரவேண்டும் என் தீவிர ஆர்வத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் தேனியில் ஆளுங்கட்சி சார்பில் பணப்பட்டுவாடா வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.

அதிமுகவிற்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று அமமுக வேட்பாளர்கள் தரப்பில் வாக்காளர்கள் ``கவனிக்கப்பட்டனர்’’.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ஈவிகேஎஸ்.இளங்கோவன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக கடைசிவரை இருந்தார். இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுகவினர் பெருமளவில் அதிமுக வாக்குகளை பிரித்து விடும் நிலை உள்ளது.

மேலும், அதிமுக தலைமை பதவியில் உள்ள ஓ.பிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் மதவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் பாஜகவுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடியுடன் நட்புக்காக தீவிர அடக்கி வாசித்தலை கையாண்டு வருவது சிறுபான்மை மக்களான இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களாக மாற்றியுள்ளது. மேலும், ஜிஎஸ்டி போன்ற திட்டத்தால் வர்த்தகம் பாதிக்கப்பட்டும், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மத்தியில் மோடிக்கு எதிரான எண்ணமும், எதெற்கெடுத்தாலும் ஆதார், பான்கார்டு என மக்களை அலைக்கழிக்கும் மோடி அரசின் மீதான எதிர்ப்பு சாமானியமக்களை திருப்பி விட்டுள்ளதும் அதிமுகவிற்கு சாதகமற்ற நிலையை உருவாக்கி உள்ளது.

அதே நேரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கடந்த முறை தனித்து நின்றபோது வாங்கிய வாக்குகளோடு, இம்முறை கம்யூனிஸ்டு கட்சிகள்,காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள்கட்சி என கட்சி பலமும் சிறுபான்மை, வர்த்தகர்களின் ஆதரவும், அரசு ஊழியர்களின் ஆதரவும் அதிகம் உள்ளது திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கி உள்ளது. அதிமுகவினர் தங்களுக்கு சாதகமான நிலை இல்லை என்பதை உணர்ந்தே வாக்குக்கு தலா ரூ.1 ஆயிரம் அளித்துள்ளதால் இம்முறை பணம் வாங்கியவர்களில் 50 சதவீதம் பேர் பணத்திற்கு மயங்கி வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.  எனவே, தேனி எம்பித் தொகுதி மட்டுமல்லாமல் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவில் பணம் வெற்றி பெறுகிறதா, அல்லது உண்மையான ஜனநாயகம் வெற்றி பெறுமா என்பது இன்று தெரியவரும்.

Related Stories: