ஓசூரில் கண்காணிப்பு கேமராவுடன் தபால் வாக்கு பெட்டி வைப்பு

ஓசூர், மே 23: ஓசூரில் தனி அறையில் கண்காணிப்பு கேமராவுடன் தபால் வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைதேர்தல் நடந்தது. இதில், ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கும் நடந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று (23ம்தேதி) நடக்கிறது. தபால் வாக்குகளுக்கு என தனிப்பெட்டி ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராவுடன் வைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் வரும் தபால் வாக்குகள் அடங்கிய கவர்கள், ஏதாவது ஒரு கட்சியின் பொறுப்பாளர் முன்னிலையில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடப்பட்டு வருகிறது. ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 1,569 தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 977 வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் மீதமுள்ள வாக்குகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. இன்று (23ம்தேதி) காலை 7 மணி வரை வாக்குகள் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் தபால்வாக்கு பெட்டியை துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன், வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: