நூறு சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, மே 23:  பாப்பிரெட்டிப்பட்டி வட்டார சிறு,குறு விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம் என்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ், சொட்டுநீர் பாசனம், மழைத்தூவான் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள பெருவிவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படும். மேலும் 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசு மானியம் பெற்று, சொட்டுநீர் பாசனம் அமைத்திருந்தாலும், தற்போதும் புதியதாக 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துக்கொள்லாம். அரசு அங்கீகரித்துள்ள 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களில், விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

மானியத்தில் அமைக்கப்படும் சொட்டுநீர் பாசன கருவிகளுக்கான ஜிஎஸ்டியை, தமிழக அரசே செலுத்தி விடுகிறது. தற்போது சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு, மானியத்துடன் கூடிய நீர் சேகரிக்கும் தொட்டி அமைத்து, மின் மோட்டாரும் பெற்றுக்கொள்ளலாம். அதே போல், நீர் கொண்டு செல்லும் குழாய்கள் மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும். எனவே, நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகள், சிட்டா அடங்கல், வரைப்படம், ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள 2 போட்டோ உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: