அடிப்படை வசதி கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர், மே 23:அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலம்மாள் நகரில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் சாலை, குடிநீர், மின்விளக்கு இது போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள் நகரில் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்திற்கு தனி அலுவலரை சந்திப்பதற்கு 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வந்தனர். அது சமயம் தனி அலுவலர் வேறு ஒரு பணிக்காக வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூரைக்குண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘இந்தப் பகுதியில் சுத்தமாக தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. 15, 20 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் தண்ணீரும் அதிக உப்புத் தன்மையுடன் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அந்த நீரையும் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாமல் பாலம்மாள் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

குடிப்பதற்கும் மற்ற உபயோகத்திற்கும் வெளியில் இருந்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும் சாலை வசதியும், தெருவிளக்கு வசதியும், கழிவுநீர் கால்வாய் போன்ற வசதி ஏதும் செய்து தரப்படவில்லை. இவை அனைத்தையும் செய்து தரக்கோரி தனி அலுவலரை சந்திக்க கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்திற்குச் வந்தோம். விரைவில் பாலம்மாள் நகருக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்’ என்றனர்.

Related Stories: