காரிமங்கலத்தில் சாலையோர ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

காரிமங்கலம், மே 23:  காரிமங்கலத்தில், சாலையோர ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலத்தில் பாலக்கோடு ரோடு, மொரப்பூர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி சாலை, கடைவீதி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளதால், எப்போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. காரிமங்கலம் நகரில் செல்லும் சாலை குறுகலாக உள்ள நிலையில், வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். மேலும், வணிக நிறுவனங்களுக்கு வருபவர்கள், தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பாலக்கோடு பிரிவு சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து வரும் பஸ்களும், தர்மபுரியில் இருந்து வரும் பஸ்களும் நேருக்கு நேராக வரும் போது, எளிதில் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதனால் இருபுறமும்  வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. ராமசாமி கோயில் பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து உரிய கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: