வனத்துறையினர் கொலை மிரட்டல் எதிரொலி பண்ணப்பட்டி கிராமத்தில் பழங்குடி மக்கள் சங்க குழு நேரில் விசாரணை

தர்மபுரி, மே 23: ஒகேனக்கல் பழங்குடி மக்கள் மீது கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதியில் பண்ணப்பட்டி வனக்கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 60 பழங்குடியின இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். காலம் காலமாக வனப்பகுதியில் வசித்து வரும் இவர்கள், காய்ந்த விறகுகள் மற்றும் சுண்டைக்காய்களை சேகரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களை வனப்பகுதியிலிருந்து வெளியேற்ற வன ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் வளர்த்து வந்து 3 நாய்களை வன ஊழியர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த பகுதியில் இருந்து வெளியேற வில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிடுவோம் என்று வன ஊழியர்கள் மிரட்டுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த செய்தி தினகரனில் வெளியானது. இதை பார்த்த மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில சிறப்பு தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஞ்சப்பன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழுவினர் பண்ணப்பட்டி வனக்கிராமத்தில் இருளர் இன மக்களை நேரில் சந்தித்து விசாரித்தனர். இதுகுறித்து குழுவினர் கூறுகையில், ஒகேனக்கல் பண்ணப்பட்டி வனக்கிராமத்தில் பழங்குடி மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தகரத்தால் ஆன வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்களுக்கு வன விளை பொருட்களை அனுபவிக்கும் உரிமையுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வனவர் (பாரஸ்டர்) காளியப்பன், வனக்காவலர் (வாட்ச்சர்) நந்தகுமார் மற்றும் மூவர் கடந்த 17ம் தேதி பண்ணப்பட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அம்மக்கள் சிலர் ஆற்றங்கரை பகுதியிலும், இன்னும் சிலர் விறகு சுள்ளிகளை சேகரிக்கும் பணியிலும் இருந்துள்ளனர். அங்கு சென்ற பாரஸ்டர் காளியப்பன் அவர்களை பார்த்து அனைவரும் காட்டை வெளியேற வேண்டும். இல்லையேன்றால் சுட்டுக் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். இவ்வாறு சொல்லிக்கொண்டே மக்களின் நாய்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஒரு நாய்க்கு தலையில் குண்டடிப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் ஓடி மறைந்துள்ளனர். மேலும் உடனடியாக அனைவரும் வெளியேற வேண்டும். இல்லையேன்றால் நாயை போல சுட்டுக் கொல்வோம் என மிரட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்காக எடுத்துக் கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பூர்வாங்கமாக காட்டில் வாழும் பூர்வீகக்குடி மக்களை சட்ட விரோதமாக வெளியேற்றும் முயற்சி நடக்கிறது. மேலும் பழங்குடி மக்களை துப்பாக்கி காட்டி கொலை மிரட்டல் விடுத்ததையும், நாய்களை சுட்டுக் கொன்ற பாரஸ்டர், வாட்ச்சர் மீது கிரிமினல் சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். நாங்கள் சேகரித்த தகவல்களை அறிக்கையாக தயார் செய்து மனித உரிமை ஆணையத்திடம் வழங்க உள்ளோம் என்றனர்.

Related Stories: