சிவகாசி பஸ் நிலையம் முன்பு ஒற்றை மரத்தை அகற்ற கோரிக்கை

சிவகாசி, மே 23:சிவகாசி பஸ் நிலையம் முன்பு சைக்கிள் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒற்றை மரத்தால் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை விரிவாக்க பணிக்கு தடையாக உள்ள இந்த மரத்தை அகற்றி புதிய பஸ்நிலைய வளாகத்திற்குள் மரங்கள் நட கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி பஸ் நிலையம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. சாத்தூர், விருதுநகர், திருவில்லிபுத்தூர் செல்லும் முக்கிய சாலையில் பஸ்நிலையம் உள்ளது.

சிவகாசி நகருக்குள் செல்லும் அனைத்து வாகனங்களும் பஸ் நிலையம் முன்புள்ள சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பஸ்நிலையம் அமைந்துள்ள சாலையில் எப்போதும் வாகன பெருக்கம் அதிகமாக இருக்கும். பஸ்நிலைய சாலை முன்புள்ள சிக்னலில் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகிறது. இங்குள்ள சாலை போதிய அளவில் விரிவாக்கம் செய்யப்படவில்லை. பஸ் நிலைய சைக்கிள் ஸ்டாண்ட் எதிரே ஒற்றை மரம் உள்ளது. இந்த மரம் திருவில்லிபுத்தூர் சாலை திருப்பத்தில் அமைந்துள்ளது.

எதிரே வாகனங்கள் வரும்போது வாகணங்கள் விலகிச் செல்ல இந்த மரம் இடையூறாக நிற்கிறது. பஸ்நிலைய சைக்கிஸ் ஸ்டாண்டில் போதிய இட வசதி இல்லை. இதனால் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் மரத்தை ஓட்டி சாலையில் வரிசையாக நிறுத்தி விடுகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுதியால் இங்குள்ள சிக்னலை கடந்து செல்ல முடியாமல்  அடிக்கடி வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. தீபாவளி, பங்குனி பொங்கள் போன்ற முக்கி திருவிழா நாட்களில் இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது போன்ற நேரங்களில் போலீசார் வாகன போக்குவரத்தை சரி செய்ய சிரமப்படுகின்றனர். பஸ்நிலையம் முன்புள்ள் ஒற்றை மரம் வாகனங்கள் செல்ல தடையாக உள்ளதால் இந்த மரத்தை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மரத்தை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றிவிட்டு புதிய பஸ்நிலையத்தில் மரங்களை நட்டு வளர்க்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் சிவகாசி பஸ்நிலையம் முன்பு மாலை 6 மணி முதல் சாலையின் இருபுறமும் டிராவல்ஸ் பஸ்களை நிறுத்தி வைத்து பண்டல் லோடு ஏற்றுகின்றனர். மணி கணக்கில் டிராவல்ஸ் பஸ்கள் நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்நிலையம் முன்பு டிராவல்ஸ் பஸ், சரக்கு வாகனங்களை நிறுத்தி லோடு ஏற்றிசெல்ல போலீசார் தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: