மதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூரில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி: சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

செய்யூர், மே 23: மதுராந்தகம் ஒன்றியம் அருங்குணம் அருகே தேவாத்தூர் நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இங்கு, உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூர் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளி, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்தது. ஆனால், அதற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. இதனால், பள்ளியின் முன்புறம் மட்டுமே சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முழுமையாக முடியாததால், இதுவரை இப்பள்ளி திறந்தவெளியாகவே காணப்படுகிறது.இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சமூக விரோதிகள் சிலர், பள்ளி விடுமுறை காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தை மது அருந்தும் இலவச பாராகவும், சமூக விரோத செயல்களுக்கு கூடாரமாக மாற்றிக் கொண்டனர். இங்கு மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்து விட்டு செல்வது உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால், பள்ளி நாட்களில் மாணவர்கள், சமூக விரோதிகள் விட்டுச்சென்ற மதுபான கழிவுகளை அகற்றும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அந்த நேரங்களில் உடைக்கப்பட்ட மதுபாட்டில் மாணவர்களின் கை, கால்களை பதம் பார்க்கிறது.அதே நேரத்தில், பள்ளியையொட்டி குளம் அமைந்துள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்கள் குளத்தின் அருகே சென்று விளையாடுகின்றனர். மழை காலங்களில் குளத்தில் தண்ணீர் நிரம்பும்போது, மாணவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, பாதியிலேயே நிறுத்தப்பட்ட சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை, மீண்டும் தொடர்ந்து, முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை கல்வி துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தற்போது, விடுமுறை காலம் முடிவடையும் நிலையில், பள்ளி துவங்குவதற்கு முன் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதியில் நின்ற சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை முழுமையாக நிறைவு செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: