குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது தனியார் நிறுவனத்துக்கு 25 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பழுதான குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை சரி செய்து தராத நிறுவனத்திற்கும், விற்பனை செய்த கடைக்கும் ₹25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவர் மணலி சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் குடிநீர் சுத்திகரிப்பு சதானம் ₹10 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த நிலையில் சாதனம் வாங்கிய சில நாட்களிலேயே பிரச்னை ஏற்பட்டு சுத்தமாக பழுதடைந்தது. பாண்டியன் இதுகுறித்து வாடிக்கையாளர் உதவி மையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் பாண்டியன் சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில், தான் வாங்கிய பொருளுக்கு வாரண்டி இருந்தும் சரி செய்து தராமல், தனது புகாரை குடிநீர் சுத்திகரிப்பு சாதன நிறுவனம் நிராகரித்து விட்டதாக கூறி புகாரளித்தார்.

இந்த வழக்கு நீதிபதி லஷ்மிகாந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வாரண்டி காலம் முடிந்து விட்டதாகவும், மேலும் பொருள் வாங்கிய முதல் வாரம் முதலே பழுது ஏற்பட்டது என்பது பொய். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையில் ராஜபாண்டியனின் கோரிக்கை நியாயமானது. எனவே அவருக்கு நிறுவனம் மற்றும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் இணைந்து ₹25 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறி உத்தரவிட்டார்.

Related Stories: