மின்விசிறி, கூடுதல் மின்விளக்கு அமைக்க உத்தரவு

சின்னசேலம், மே 23: வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயபாளையம் சமுதாயக் கூடத்தை ஆய்வு செய்த செயல் அலுவலர், மக்களின் கோரிக்கை ஏற்று மின்விசிறி, கூடுதல் மின்விளக்கு வசதியுடன் மாடியில் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயபாளையம் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. அந்த சமுதாயக் கூடத்தில் அக்கராயபாளையம் புதுகாலனி, அக்கராயபாளையம் காலனி, மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்த பகுதி மக்கள் திருமணம், காதணி விழா உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த சமுதாய கூடத்தில் மின்விசிறி, கூடுதல் மின்விளக்கு, வருபவர்கள் சாப்பிட தனி கட்டிட  வசதி இல்லை என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.

இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமையில் பேரூராட்சிகளின் உதவி பொறியாளர் சரவணன், தலைமை எழுத்தர் முத்து, மேஸ்திரி ராஜா உள்ளிட்டோர் சமுதாய கூடத்தை ஆய்வு செய்தனர். அப்போது தேவையான அளவு மின்விசிறி, கூடுதல் மின்விளக்குகள் ஆகியவற்றை உடனடியாக பொருத்த வேண்டும் என செயல் அலுவலர் உத்தரவிட்டார். மேலும், சாப்பிட வசதியில்லாததை அறிந்த செயல் அலுவலர் ஆறுமுகம், உதவி பொறியாளரிடம் ஆலோசனை செய்து, பின்னர் சமுதாயக்கூடத்தின் மாடியில் கட்டிடம் கட்டி உணவு அருந்தும் அறையாக பயன்படுத்த உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும்  மக்களிடம் கூறினார். அதேபோல், சமுதாய கூடத்தை சுற்றி சுற்று சுவர் கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அங்கிருந்த போர்வெல்லை மேலும் ஆழப்படுத்திடவும் உடனடியாக உத்தரவிட்டார். அப்போது இளநிலை உதவியாளர் சுகந்தி, குடிநீர் திட்ட உதவியாளர்கள் ராமச்சந்திரன், கங்காதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: