மருந்து மாத்திரைகள் இருப்பில் வைக்க வேண்டும்

மரக்காணம், மே 23: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள், மீனவர்கள், உப்பு தொழிலாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள். இங்குள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் காய்ச்சல், விஷ ஜந்துக்கள் கடித்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மரக்காணம் அரசு பொது மருத்துவ மனைக்குத்தான் வரவேண்டும்.

இப்பகுதி கிழக்கு கடற்கரை சாலை ஓரம் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடலில் பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றனர். இவர்களை சிகிச்சைக்காக இங்குள்ள அரசு பொது மருத்துவமனைக்குத்தான் அழைத்து வருகின்றனர். ஆனால் இந்த மருத்துவமனையில் பகல் நேரத்தில் மட்டுமே டாக்டர்கள் இருக்கின்றனர். இரவு நேரத்தில் டாக்டர்கள் இருப்பதில்லை. இரவு நேரங்களில் நர்ஸ்கள் மட்டுமே இருக்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே, இசிஜி போன்ற கருவிகளும் இல்லை.

பாதிக்கப்பட்டு இங்கு வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் அடிக்கடி பிரச்னைகள் உண்டாகிறது. இது போன்ற பிரச்னைகளால் அடிக்கடி காவல் நிலையம் வரை செல்லும் நிலையும் உண்டாகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களை புதுவை, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு அழைத்து செல்லும் நிலை உள்ளது. தற்போது பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோய், இருதய நோய் உள்ளிட்டவைகள் உண்டாகிறது. இந்த நோய்களுக்கான மாத்திரைகளின் விலை அதிகம் என்பதால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில்தான் மருந்து, மாத்திரைகள் வாங்கும் கட்டாய நிலை உள்ளது. ஆனால் இந்த நோய்களுக்கு இங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் போதிய மருந்து மாத்திரைகள் இல்லை. எனவே, இப்பகுதி பொது மக்களின் நலன் கருதி இங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் இரவு நேரத்தில் 2 டாக்டர்களை நியமித்து 24 மணி நேரமும் இயங்கக் கூடிய அவசர சிகிச்சை மையம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வியாதிகளுக்கும் கொடுக்கக்கூடிய போதிய மருந்து மாத்திரைகளை உடனடியாக வழங்க மாவட்ட மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: