உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பைடு மாம்பழங்களை கண்டுபிடித்து அழிப்பது எப்போது?

புதுச்சேரி, மே 23:முக்கனிகளான மா, பலா, வாழையில் முதலிடத்தில் இருப்பது மாம்பழம் தான். தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி விட்டது. மாம்பழத்தின் ருசியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. புதுச்சேரி பெரிய மார்க்கெட் மற்றும் பழக்கடைகளில் பல்வேறு ரக மாம்பழங்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஆந்திரா, மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் வருகிறது. ஆந்திராவில் இருந்து வந்துள்ள பங்கனப்பள்ளி மாம்பழம் கிலோ ரூ.40 முதல் ரூ.60க்கும், மரக்காணம் கடப்பாக்கம் பகுதிகளில் இருந்து வந்துள்ள செந்தூரா மாம்பழங்கள் ரூ25க்கும், ஒட்டு மாங்காய் ரூ.20க்கும், இசிஆர் மரக்காணம் வெண்ணாங்கப்பட்டு பகுதியில் இருந்து வந்துள்ள ரெமோனியா மாம்பழம் ரூ.40க்கும், இமாம்பஸ் வகை மாம்பழகம் ரூ.100க்கும் விற்கப்படுகின்றன. மழை இல்லாததால் இந்தாண்டு விளைச்சல் குறைவு. இதனால் கடந்தாண்டை ஒப்பிடுகையில் இப்போது மாம்பழம் வரத்து குறைந்து விட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர். ருசிக்காக மாம்பழத்தை சாப்பிட்டாலும் அதில் வைட்டமின் ஏ, சி சத்துக்களும், இரும்புச்சத்தும் அடங்கியுள்ளன. பழைய காலத்தில் காற்று புகாத இருட்டு அறையில் மாங்காய்களை குவித்து வைத்து அதினுள் புகைமூட்டம் போட்டு பழுக்க வைப்பார்கள். வீட்டில் நாம் அரிசி, வைக்கோல் இடையே மாங்காய்களை வைத்து பழுக்க வைத்து சாப்பிடுவோம்.

இதுபோல் தானாக பழுக்கும் பழங்களில் மருத்துவ குணமும் நிறைந்துள்ளன. மாம்பழங்களில் இத்தனை சத்துக்கள் இருந்தாலும், கார்பைடு கல் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களால் உடலுக்கு பல்வேறு தீங்கு விளைவிக்கின்றன. இயற்கையாக பழுக்க 10 நாட்கள் வரை ஆகும் என்றால், இந்த கார்பைடு கல் மூலம் வெளியாகும் அசிட்டிலீன் வாயுவின் மூலம் 6 மணி நேரத்திற்கு உள்ளாகவே மாம்பழம் பழுத்து விடும். இந்த கார்பைடு கல் என்பது கேஸ் வெல்டிங் செய்யப்படுத்தும் ரசாயனம் ஆகும். மாம்பழம் மட்டுமின்றி வாழை, பப்பாளி, சப்போட்டா, அன்னாசி உள்ளிட்ட பழங்களும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படுகின்றன. கார்பைடு கற்களை சிறு, சிறு துண்டுகளாகவோ அல்லது பவுடராகவோ மாற்றி அதை பேப்பர்களில் மடித்து மாங்காய்களின் ஊடே வைத்து விடுகிறார்கள். கார்பைடு பவுடரில் இருந்து வெளியாகும் அசிட்டிலீன் ரசாயன வாயு விரைவாக பழுக்க வைக்கிறது.

 இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி கார்பைடு கல் மூலம் பழுக்க வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதை மீறி மொத்த வியாபாரிகள் சிலர்,  ஒரே நேரத்தில் விரைவாக அதிக லாபம் பார்க்க இதுபோல் செய்கின்றனர். மாங்காய் ரூ.20 முதல் ரூ.30 இருந்தால், ஒரே நாளில் பழுக்க வைப்பதன் மூலம் ரூ.50 முதல் 70 வரைக்கும் விற்று விடுகின்றனர். கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் தோல் மட்டும் பழுத்திருக்கும், உள்ளே பழுத்திருக்காது. தோலில் சிறு, சிறு கரும்புள்ளிகள் காணப்படும். தொட்டால் சூடாக இருக்கும். ருசி இருக்காது, புளிப்பாக இருக்கும். 2 அல்லது 3 நாளிலேயே அழுகி விடும். ஆனால் இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், சற்று இளஞ்சிவப்பு நிறத்துடன் இருக்கும். கடைசியாகத்தான் காம்பு பகுதி பழுக்கும்.

 கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உண்பதன் மூலம் கல்லீரல், குடல், இரைப்பை, தோல் பாதிக்கப்படும். வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், வயிற்றுப்புண், தலைவலி, ஒவ்வாமை, நாளடைவில் புற்றுநோய் ஏற்படும். ஆகையால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆண்டுதோறும் மாம்பழ சீசனில் குடோன், பழக்கடைகளில் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்து அழிப்பார்கள். ஆனால், இந்தாண்டு மாம்பழ சீசன் தொடங்கி பல நாட்களாகியும் இன்னும் அதிகாரிகள் சோதனை நடத்துவதில்லை. இதனால் கார்பைடு மாம்பழங்களை மக்களிடத்தில் விற்றுவிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதிகாரிகள் உடனடியாக திடீர் சோதனைகள் நடத்த வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: