தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் கலெக்டர், பார்வையாளர்கள் திடீர் ஆய்வு

தூத்துக்குடி, மே 23:  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயத்த பணிகளை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.  மேலும் அலுவலர்களுக்குத் தேவையான முக்கிய ஆலோசனைகள் வழங்கினர். மக்களவைக்கான பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடந்தது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலிலும், இம்மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (23ம் தேதி) காலை 8 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

 இதையொட்டி இம்மையத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இம்மையத்தை   மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சந்தீப் நந்தூரி,  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் சீமா ஜெயின், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் மாதவி லதா,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வாக்கு எண்ணிக்கை அறையில் ஒவ்வொரு மேஜைகளிலும் மைக்ரோ அப்சர்வர்கள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உள்ள வரிசை எண் குறிப்பிட்டுள்ளதா என்பதையும் ஆய்வு நடத்தினர். அத்துடன் தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட அஞ்சலக வாக்குச்சீட்டு எண்ணிக்கைக்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் பார்வையிட்டு அலுவலர்களுக்குத் தேவையான முக்கிய ஆலோசனைகள் வழங்கினர். ஆய்வின் போது டிஆர்ஓ வீரப்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார்,  உதவி இயக்குநர் ஊராட்சிகள் உமா சங்கர்,  ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார்  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசந்திரன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: