ராதாபுரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

ராதாபுரம், மே 23:  நெல்லை மாவட்டம் ராதாபுரம், தாலுகா தலைநகராக விளங்குகிறது. இவ்வூரை சுற்றி காரியாகுளம், நெடுவாழி, பாப்பான்குளம், பாவரித்தோட்டம், செம்மண்குளம், மகேந்திரபுரம் போன்ற குக்கிராமங்கள் உள்ளன. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இங்குள்ள நீர்நிலைகள் வற்றி காணப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதால், ராதாபுரம் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் கவனக்குறைவால் பெரும்பாலான வார்டுகளில் பல நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ராதாபுரம் கணபதிநகர், கருவூலபகுதிக்கு தெற்கு, 2வது வார்டு மாதா கோயில் தெரு, 4வது வார்டு ஆகிய பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராதாபுரம் அன்னை நகரில் அரசு இலவச வீடுகளை கட்டித் தந்துள்ளது. இந்த வீடுகளில் குடியிருக்கும் மக்களின் தேவைகளுக்காக குடிநீர் இணைப்பு ஒன்று வழங்கப்பட்டு இருந்தது. இது பழுதாகி பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லை. குடிநீர் விநியோகமும் இல்லை. ராதாபுரம் 2வது வார்டிலும் இதுபோலவே குடிநீர் விநியோகிக்கப்பட்டு பல நாட்களாகிறது.

ராதாபுரத்திற்கு தெற்கே அமைந்துள்ள காட்டாறு என்றழைக்கப்படும் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு ராதாபுரம் நகருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த மாதம் வரை எவ்வித தடங்கலுமின்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளதால் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆழ்துளை கிணறுகளில் நீர் உறிஞ்சும் குழாய்களின் ஆழத்தை அதிகரித்தால் நீரேற்ற வாய்ப்பு கிடைக்கும். மீண்டும் தடையின்றி சீராக குடிநீர் விநியோகிக்கலாம். ஆனால் இவ்விஷயத்தில் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே இனியாவது காட்டாறு ஆழ்துளை கிணறுகளில் குழாய்களை மாற்றி தடையின்றி குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: