குறைந்த பெட்டிகளோடு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் சிலிப்பர் வசதி செய்யப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை, மே 23:  நெல்லையில் இருந்து பாலக்காட்டிற்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் குறைந்த பெட்டிகளோடு இயக்கப்படுவதால் பயணிகள் அதிருப்தியில் உள்ளனர். இந்த ரயிலில் சிலிப்பர் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் அந்த வழித்தடத்தில் கடந்த ஓராண்டாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பாசஞ்சர் ரயில்களே அதிகம் புனலூர் வரை இயக்கப்பட்ட நிலையில், நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கடந்த ஜூன் மாதம் முதல் நெல்லையில் இருந்து பாலக்காட்டிற்கு பாலருவி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, அம்பை, கடையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்த எக்ஸ்பிரஸ் 11 பெட்டிகளோடு இயக்கப்பட்டது.

இந்த ரயில் காலப்போக்கில் பெட்டிகள் குறைக்கப்பட்டு தற்போது 6 அல்லது 7 பெட்டிகளோடு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கூட்டம் தினமும் பாலருவி எக்ஸ்பிரசில் அலைமோதுகிறது. பல பயணிகள் நின்று கொண்டே பயணிக்கின்றனர். நெல்லையை பொறுத்தவரை பாலருவி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமாகவும் செங்கோட்டைக்கு இரவு நேரத்தில் இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் திரளாக அதில் செல்கின்றனர். எனவே பாலருவி எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

இதுகுறித்து நெல்லை ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘நெல்லை- செங்கோட்டை மார்க்கத்தில் இரவு ரயில்கள் இல்லை என்ற குறையை தீர்க்கும் வகையில் பாலருவி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் முன்பு 9 பொது பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகளோடு இயக்கப்பட்டு வந்தது. இப்போது வெறும் 7 பெட்டிகளோடு பெயரளவுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பல பயணிகள் நின்று கொண்டே பயணிக்கின்றனர். கேரளாவில் பல இடங்களுக்கு செல்வோர் இந்த ரயிலை நம்பியே பயணிக்கின்றனர். எனவே பாலருவி எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும்’’ என்றார். மேலும் பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று வரை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் ஸ்லிப்பர் பெட்டி வசதிகளோடு, ஏசி பெட்டிகளோ ஒன்று கூட இல்லை. சாதாரண பொதுப்பெட்டிகளை கொண்டே இயக்கப்படுகிறது. அந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. எனவே பாலருவி எக்ஸ்பிரசில் ஸ்லிப்பர் பெட்டிகளையும் விரைந்து இணைக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

Related Stories: