புளியங்குடி முப்பெரும்தேவியர் கோயிலில் திருவிளக்கு பூஜை

புளியங்குடி, மே 22: புளியங்குடி முப்பெரும்தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளாகப் பங்கேற்றனர்.  பவுர்ணமி தோறும் புளியங்குடியில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் அருள்பாலிக்கும் முப்பெரும் தேவியர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், திருவிளக்கு பூஜையும் நடந்து வருகிறது. அந்த வகையில் வைகாசி பவுர்ணமியையொட்டி கோயிலில் பாலாபிஷேகம் முதலான பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நேற்று முன்தினம் வெகுசிறப்பாக நடந்தது. மாலை 5.30 மணிக்கு பவுர்ணமியின் சிறப்புகளை சக்தியம்மா விளக்கிப் பேசினார்.  தொடர்ந்து மழை மற்றும் உலக நன்மை வேண்டி மாலை 6 மணிக்கு முப்பெரும்தேவியருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.  இதே போல் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி,  பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இரவு 8 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் திரளாகப் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.  ஏற்பாடுகளை கோயில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: