தபால் வாக்கு எண்ண 4 உதவி தேர்தல் அலுவலர் நியமனம்

திருப்பூர், மே 22:  திருப்பூரில் தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ராணுவ வீரர்களின் தபால் வாக்குகள் எண்ண ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்தார். திருப்பூர் மக்களவை தொகுதி உள்ளடக்கிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (23ம் தேதி) ஆர்.ஜி., பெண்கள் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கிறது. எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் இதர அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கேமரா தொகுப்புகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.  மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், மேலிட பார்வையாளர் தவிர இதர நபர்கள் யாரும் செல்போன் எடுத்து வர அனுமதியில்லை. தபால் வாக்குகள் எண்ணுவதற்கு நான்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், ராணுவ வீரர்களின் தபால் வாக்கு எண்ண ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

6 சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் வாக்குகள் எண்ணுவதற்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு எண்ண 4 மேஜைகளும், ராணுவ வீரர்களின் தபால் வாக்குகள் ஸ்கேன் செய்வதற்கு ஒரு மேஜையும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில்,`ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பூர் திருமங்கலத்தில் கடந்த ஏப்.18ம் தேதி வாக்குபதிவின் போது மாதிரி வாக்குகள் சரி பார்க்கும் பணியில் விதிமுறை மீறப்பட்டது.

இதனால், மே 19ம் தேதி மறு தேர்தல் நடந்தது. ஆகையால், வாக்குபதிவின் போது விதிமீறிய தேர்தல் அலுவலர்கள் மீது ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிக்கை கொடுத்த பின்பு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், இதுவரை 4,290 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளது. அத்துடன் எல்ஆர்ஜி அரசு கல்லூரி வளாகத்தில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் என மொத்தம் 477 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: