கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, மே 22: கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களால், 13 குறுவள மையங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வீடு வீடாக சென்று ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இதையொட்டி கட்டிகானப்பள்ளி புதூர் குறுவளை மையத்திற்குட்பட்ட கே.ஏ.நகர், பையனப்பள்ளி, சிப்பாயூர், ஜாகிர் நாட்டறம்பள்ளி போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தீவிர மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. நேற்று காலை வட்டாரக்கல்வி அலுவலர் கிருஷ்ணதேஜஸ் தலைமையில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி முன்னிலையில், அனைத்து பள்ளி ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று, அரசுப் பள்ளியின் முக்கியத்துவம், அதன் செயல்பாடுகள், சாதனைகள், அரசு வழங்கி வரும் சலுகைகள், ஆங்கில வழிக்கல்வி குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறினர்.

மேலும், மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், நேரடி சேர்க்கை வீட்டிலேயே செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் சேகர், மரியகேப்ரியல்சுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல், சிக்கபூவத்தி, பாலகுறி, பெத்ததாளாப்பள்ளி, கே.ஆர்.பி., அணை, ராசுவீதி, பழையபேட்டை, கம்மம்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, மகாராஜகடை, அண்ணாநகர், பேட்டேப்பள்ளி ஆகிய குறுவள மையங்களில் 528 ஆசிரியர்கள், 8 ஆசிரியர் பயிற்றுனர்கள், 4 சிறப்பு ஆசிரியர்கள், 2 கணக்காளர்கள் பங்கேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வீடுதோறும் அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் மேற்கொண்டனர்.

Related Stories: