அன்னசாகரம் ஏரியை தூர்வார வேண்டும்

தர்மபுரி, மே 22: தர்மபுரி அருகே, சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ள அன்னசாகரம் ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சி எல்லைக்குள் உள்ளது அன்னசாகரம் ஏரி. சுமார் 480 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு முக்கல்நாயக்கன்பட்டி மலை, வத்தல்மலையில் இருந்து நீர்வரத்து உள்ளது. ஏரிக்கு வரும் கால்வாய் தூர்ந்து போனதால், கடந்த 15 வருடமாக அன்னசாகரம் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பெய்த கன மழையால்  அன்ன சாகரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அன்னசாகரம், ஏ.கொல்ல அள்ளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 3 மாதங்களில் ஏரி நீர் வறண்டு விட்டது. மேலும், ஏரியில் வளர்ந்திருக்கும் சீமைகருவேல முள்மரங்களை வெட்டி அகற்றாததால், முழுமையாக நிறைந்தும் ஏரி வறண்டது.

எனவே பொதுப்பணித்துறையினர் வரும் பருவமழைக்கு முன்னதாக நீர்வரத்தை காக்கும் பொருட்டு அன்னசாகரம் ஏரியில் வளர்ந்திருக்கும் சீமை கருவேல முள்மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறும் போது, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 480 ஏக்கர் பரப்பில் உள்ள அன்னசாகரம் ஏரி, ஆக்ரமிப்பால் தற்போது 200 ஏக்கராக சுருங்கி விட்டது. மேலும் வருகிற பருவ மழையை கருத்தில் கொண்டு ஏரியில் வளர்ந்திருக்கும் சீமை கருவேல முள்மரங்களை அகற்ற வேண்டும் என பல ஆண்டாக விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தோம். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் 2015ம் ஆண்டு பெய்த மழைக்கு ஏரி நிரம்பியும் முள்மரங்களால் நீர் முற்றிலும் வறண்டு விட்டன. எனவே நடப்பாண்டு பருவமழைக்கு முன்பு ஏரியில் வளர்ந்திருக்கும் முள்மரங்களை அகற்றியும், கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: