டாஸ்மாக் பார்களில் தடையின்றி புழங்கும் பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிகாரிகள் கவனிப்பார்களா?

தேனி, மே 22: தேனி நகரில் உள்ள டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழக அரசு மண்வளத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியதாக கருதப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாலித்தீன் டம்ளர்கள், பாலித்தீன் பைகள், மெழுகு பூசப்பட்ட காகித டம்ளர்கள் ஆகியவற்றிற்கு தடை விதித்துள்ளது. எனவே தேனியில் பல அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறி கடைகளில் துணிப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்காரணமாக நகராட்சி குப்பைகள் சேகரிக்கும்போது தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

அதேசமயம் தேனி நகரிலும், மாவட்ட அளவிலும் பரவலாக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் இதனைசார்ந்துள்ள மதுபான பார்களில் தடை செய்யப்பட்ட பாலித்தீனாலான பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தப்படுவது தடையின்றி தொடர்ந்து வருகிறது. இத்தகைய டம்ளர்களை குடிகாரர்கள் குடித்து விட்டு சாலைகளில் வீசிச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள், டம்ளர்கள் விற்பனையை கண்காணிக்கும் சுகாதாரத் துறை மற்றும் உணவுபாதுகாப்புத் துறையினர் டாஸ்மாக் மதுபான பார்களுக்கு திடீரென சென்று ஆய்வு செய்ய வேண்டும். தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் டம்ளர்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கையை மாவட்டநிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: