சரியும் பெரியாறு நீர்மட்டம் கேள்விக்குறியாகும் முதல் போகம் மழைக்கு காத்திருக்கும் விவசாயிகள்

கூடலூர், மே 22: பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால், இந்த ஆண்டு முதல்போகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற ஆவலோடு வான்மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தேனி மாவட்ட விவசாயிகள். கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்றுவருகிறது. முல்லை பெரியாற்று நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்ததால் முதல்போகத்திற்கு தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் அணைநீர்மட்டம் 127.20 அடியாக இருந்தபோது முதல்போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல்போகத்திற்கு தண்ணீர் திறக்கும் நாள் நெருங்கி விட்டது.

ஆனால் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 112.15 அடியாக உள்ளது. இதனால் விரைவில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால்தான் முதல்போகத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியும். இதனால் வான்மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தேனி மாவட்ட விவசாயிகள். 

Related Stories: