இ ந் த நா ள் சிவகங்கை மக்களவை, மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் காரைக்குடியில் நாளை வாக்கு எண்ணிக்கை

சிவகங்கை, மே 22: சிவகங்கை மக்களவை தொகுதி மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காரைக்குடியில் நடக்க உள்ளதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.18ல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான அறிவிப்பு மார்ச் 10ல் வெளியிடப்பட்டு அன்றே தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. சிவகங்கை மக்களவை தொகுதியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணி முதல் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடக்க உள்ளது. காங்கிரஸ், அமமுக, பாஜ, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் 18 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 26 பேர் களத்தில் உள்ளனர். மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக உள்பட 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எந்திரங்கள் அனைத்தும் காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாக்கு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

நாளை காலையிலேயே வாக்கு எண்ணும் பணி நடக்க உள்ளதால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் இன்று மாலை முதல் காரைக்குடி செல்ல உள்ளனர். வாக்கு எண்ணும் பணி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இருந்து ஒவ்வொரு சுற்று முடிவிலும் முன்னிலை அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் தேர்தல் முடிவுகளை அறிய வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான கட்சியினர் கூடுவர். இதையொட்டி வாக்கு எண்ணும் மையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: