நிறுத்தப்பட்ட கிராமங்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்

சிவகங்கை, மே 22: கடந்த 2017-2018ம் ஆண்டில் 72ஆயிரத்து 154 எக்டேர் நெல் பயிர் சாகுபடி செய்த நிலையில் முழுமையாக அனைத்து பயிர்களும் கருகின. 93ஆயிரத்து 662 விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்தனர். இதில் 84 ஆயிரத்து 180 விவசாயிகளுக்கு மகசூல் இழப்பீடு கணக்கிடப்பட்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக இழப்பீடு தொகை ரூ.286 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக நூறு சதவீதம் முற்றிலும் விளையாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் 12 சதவீதம், 14 சதவீதம், 21 சதவீதம் என ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு அளவில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிகக்குறைவாக 10சதவீதம், 14சதவீதம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இன்றி கடும் பாதிப்படைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில் சுமார் 177 வருவாய் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தவறான மற்றும் ஆவணங்கள் மற்றும் கூடுதல் பதிவுகளால் இழப்பீடு வழங்குவது நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்பட்டது. போலியான பதிவுகள் நீக்கப்பட்டு தகுதியுள்ள பதிவுகள் பிரித்தெடுக்கும் பணி நிறைவடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுவரை தகுதியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் மேலும் பாதிப்படைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் நூறு சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்குறிய பதிவுகளுக்கு மட்டும் நிறுத்தி விட்டு மற்ற விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளுக்கு மிகக்குறைந்த அளவில் இழப்பீடு வழங்குவது என்பதற்கு கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி தான் காரணம். குறைந்த இழப்பீடு நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. இழப்பீட்டை வழங்கவும், இழப்பீடு வழங்கலில் ஏற்பட்டுள்ள மோசடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றனர்.

Related Stories: