நாற்றுகளை காக்கும் வெள்ளை துணி வேளாண் உற்பத்தியை பெருக்க ஒருங்கிணைந்த பண்ணைய முறையை கடைப்பிடிக்கலாம்

சிவகங்கை, மே 22: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணைய முறையினை கடைப்பிடித்து வேளாண்மை உற்பத்தியை பெருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கையில், ‘விவசாய பொருட்களின் உற்பத்தியினை பெருக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்திடவும் ஒருங்கிணைந்த பண்ணையம் சிறந்த வழிமுறையாகும். வேளாண் சார்ந்த தொழில்களான கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றை விஞ்ஞான முறையில் மேற்கொண்டு குறைந்த செலவில் நிலையான வருமானம் பெறலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ள நல்ல வாய்ப்புகள் உள்ளது. இம்முறையில் பண்ணை கழிவுகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இயற்கை உரமாக பயன்படுவதால் இடுபொருட்கள் தேவை வெகுவாக குறையும். பயிர் சாகுபடியோடு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில்களை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்து செயல்படுத்தும் போது தனிப்பயிர் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட கூடுதல் வருமானம் பெறலாம்.

மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏற்படும் வறட்சியால் ஏற்படும் எதிர்பாராத திடீர் இழப்புகளை தவிர்த்திட சிறந்த மாற்றுத்திட்டம் ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகும். இப்பண்ணைய முறையில் தோட்டக்கால் நிலங்களில் நீர்பாசன வசதிக்கு ஏற்ப விவசாயி தேர்வு செய்யும் வேளாண் பயிருடன் (சோளம் + துவரை, மக்காச்சோளம் + தட்டைபயறு 2.5 ஏக்கர்) 0.5 ஏக்கரில் கம்பு, நேப்பியர் ஒட்டு தீவனப் புல் சாகுபடி செய்து 6 கலப்பின கறவை மாடுகள் மற்றும் 4அல்லது 8 சென்ட்டில் காய்கறித் தோட்டம் அமைக்கலாம்.

இதனுடன் 4 தேனீ பெட்டிகள் வைத்து தேன் உற்பத்தி செய்யலாம். மாடு வளர்ப்பின் மூலம் கிடைக்கும் சாணத்தைக் கொண்டு 2 கி.மீ உற்பத்தி திறன் கொண்ட சாண எரிவாயு கலன் அமைத்து சுத்தமான எரிவாய்வும், இயற்கை உரமும் பெறலாம். 10+1 என்ற எண்ணிக்கையில் ஆடு, 30 நாட்டுக்கோழி வளர்க்கலாம். பயிர் கழிவுகளைக் கொண்டு தினமும் 2 கிலோ உணவுக் காளான் மற்றும் 20 பாட்டில் காளான் விதைகள் உற்பத்தி செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: