முத்துப்பேட்டை அடுத்த உப்பூரில் 3 மாதத்திற்கு மேலாக சேதமாகி கிடந்த மின் கம்பம் சீரமைப்பு

முத்துப்பேட்டை, மே 22: முத்துப்பேட்டை அடுத்த உப்பூரில் 3 மாதங்களுக்கும் மேலாக சேதமாகி கிடந்த மின் கம்பம் தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சாலையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி கடந்த பிப்ரவரி 26ம் தேதி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது உப்பூர் என்ற இடத்தில் முத்துப்பேட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி சாலை நோக்கி சென்ற பைக் நிலை தடுமாறியதில் எதிரே  வந்த கார் பைக் மீது மோதி பின்னர் சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் மின் கம்பம் அடியோடு துண்டாகியது. இந்த விபத்தில்  அதிர்ஷ்டவசமாக மின் கம்பிகள் அறுந்தும் விழவில்லை. கார் மற்றும் பைக்கில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

ஆனால்  விபத்து நடந்து 3 மாதங்களாகியும் விபத்தில் அடியோடு துண்டாகி விழுந்த மின் கம்பத்தை அகற்றி அப்பகுதியில் புதிய மின் கம்பத்தை நட முத்துப்பேட்டை மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் துண்டான மின் கம்பம் அப்பகுதியில் போக்குவரத்துக்கும் பொதுமக்கள் நடமாடுவதற்கும் மிகவும் இடையூறாக இருந்தது.  அதேபோல் அப்பகுதியில் மின் கம்பம் இல்லாததால் அப்பகுதியை கடந்து செல்லும் உயர் மின் அழுத்த கம்பி ஒரு ஆள் கைக்கு எட்டும் உயரத்தில் தாழ்வாக சென்றது. இதனால் பலமான காற்று வீசும்போது கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின் கசிய வாய்ப்புகள் உள்ளது. மேலும் கம்பி அறுந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என்றும்  சுட்டிக்காட்டி கடந்த 18ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து முத்துப்பேட்டை மின்சார வாரியம் துரித நடவடிக்கை எடுத்து துண்டாகிய மின் கம்பத்தை அகற்றிவிட்டு அப்பகுதியில் புதிய மின் கம்பத்தை நட்டு தாழ்வாக சென்ற கம்பியை உயரமாக பொருத்தப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

Related Stories: