நீடாமங்கலம் பகுதியில் குளங்கள் வற்றியதால் மீன் வளர்ப்பு தொழில் பாதிப்பு

நீடாமங்கலம், மே 22: நீடாமங்கலம் பகுதியில் குளங்கள் வற்றியதால் மீன் வளர்ப்பு தொழில் பாதிப்பு அடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் சரியான சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைவாக வந்ததாலும், போதுமான மழை பெய்யாததாலும் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கவில்லை. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குளம், முன்னாவல்கோட்டை, காளாச்சேரி, பூவனூர், காரிச்சாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், அதே போன்று கொரடாச்சேரி பகுதியில் உள்ள குளம், குட்டைகளிலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வறண்டு கிடக்கிறது.

இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. குளங்களில் தண்ணீர் இல்லாததால் நீடாமங்கலம் பகுதி மீனவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக மீன் வளர்க்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சில குளங்களில் மீன்குஞ்சுகள் விட்டு வளர்த்து வரும் நிலையில் அதிக வெயில் காரணமாக மீன்குஞ்சுகள் இறந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நீடாமங்கலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் நாட்டு கெண்டை மீன் கிலோ ரூ.200 வரையும், விரால் கிலோ ரூ.600 வரையிலும் விற்பனையாகிறது. குளங்கள் காய்ந்து வறண்டு கிடப்பதால் மீனவர்கள் மீன் வளர்க்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்டு வரும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: