கூத்தாநல்லூர் 22வது வார்டு அன்வாரியா தெருவில் கைப்பம்பு மாயமானதால் குடிநீருக்கு மக்கள் அவதி

கூத்தாநல்லூர், மே 22: கூத்தாநல்லூர் 22வது வார்டில்  பொருத்தப்பட்டிருந்த பொது கைப்பம்பை உடனடியாக மீண்டும் நிறுவி பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியின் 22வது வார்டாக அமைந்திருப்பது அன்வாரியாதெரு. இந்த தெருவில் பொதுமக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே கைப்பம்பு ஒன்றை அரசு நிர்வாகம்  அமைத்து தந்தது. அந்த கைப்பம்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  பழுது ஏற்பட அங்குள்ள பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் பழுதை நீக்கித்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளடைவில் இந்த கைப்பம்பு பழுது நீக்கப்படாமல் பயன்பாடின்றி இருந்ததால் தற்போது அந்த கைப்பம்பையே காணவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க வழியின்றி அவதியுறுகின்றனர்.

இதுகுறித்து இந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலரும், தேமுதிக. மாவட்ட துணை செயலாளருமான முகமது மைதின் என்பவர் கூறும்போது, இந்த கைப்பம்பு பழுதானதிலிருந்து அதை சீர்செய்ய பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனுமூலமும், நேரடியாகவும் புகார் தெரிவித்து இருக்கிறேன். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இந்த கைம்பம்பு பழுதை சீர்செய்யாமல் காலம் தாழ்த்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். கைம்பம்பு பயனற்று இருந்ததால் அதையும் யாரோ கழற்றிக்கொண்டு போய் விட்டனர். இந்த கைப்பம்பு, இங்கிருக்கும் தெரு வாசிகளுக்கும், பாண்டுகுடி மக்களுக்குமான குடி நீர்தேவையை போக்கி வந்தது.  தற்போது அந்த கைப்பம்பு இல்லாத நிலையில் மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்றுவர வேண்டியிருக்கிறது. மக்கள் புது கைப்பம்பு அமைத்து தர வேண்டும் என்று  நகராட்சி நிர்வாகத்திடம் கேட்கவில்லை. ஏற்கனவே நகராட்சியால் போடப்பட்டிருந்த கைப்பம்பை மீண்டும் அந்த இடத்தில் நிறுவவே கோரிக்கை வைக்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கைப்பம்பை அதே இடத்தில் அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories: