ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடகோரி தஞ்சையில் ஜூன் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு

தஞ்சை, மே 22: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சையில் ஜூன் 4ம் தேதி அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தஞ்சையில் அனைத்து கட்சி மற்றும் அனைத்து அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி, தமிழர் தேசிய முன்னணி அய்யனாவரம் முருகேசன், மதிமுக உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சொக்கா ரவி, ஐஜேகே சிமியோன் சேவியர் ராஜ், மக்கள் அதிகாரம் காளியப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜெயனலாவுதீன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆலோசனை நடந்தது.

கூட்டத்தில் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வேதாந்தா நிறுவனத்துக்கும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் ஒற்றை லைசென்ஸ் முறையில் மத்திய, மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் அனுமதி வழங்கியதன் மூலம் இந்த நிறுவனங்கள் பணியை தொடங்கி விட்டன. விவசாயம் அழிக்கப்படவும், மக்கள் வாழ்விழந்து வீதியில் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி பாசன பகுதி விவசாயத்தை பாதுகாக்கும் விதத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை களப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சையில் ஜூன் 4ம் தேதி அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: