வறட்சியிலும் குழாய் உடைப்பால் வீணாகி வரும் காவிரி குடிநீர்

திருவாடானை, மே 22: திருவாடானை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் அனைத்தும் வீணாகி வருகிறது.

திருவாடானை மற்றும் தொண்டி பகுதிகளுக்கு சின்ன கீரமங்கலம் கல்லூர் வழியாக காவிரி குடிநீர் குழாய் பாதிக்கப்பட்டு குடி தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இதில் கல்லூர் பாரதி நகர் ஆகிய இடங்களில் குடிதண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அனைத்தும் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. இதனால் திருவாடானை மற்றும் தொண்டி பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிதண்ணீர் செல்லாமல் தடை ஏற்பட்டுள்ளது. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சாலை ஓரங்களில் குடிநீர் குழாய் பாதிக்கப்பட்டு குடி தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடி தண்ணீர் வீணாகிறது. சில சமூக விரோதிகள் குடிநீர் குழாயை உடைத்து விடுகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் கூறினாலும், அதை உடனடியாக சரி செய்ய முன்வருவதில்லை. மேலும் குழாயை உடைத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் பல கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே உடன் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: