இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தஞ்சை எஸ்பியிடம் புகார்

கும்பகோணம், மே 22: தஞ்சை எஸ்பியிடம் இந்து மக்கள் கட்சி நிர்வாகி பாலா மற்றும் சிவசேனா மாவட்ட செயலாளர் சசிகுமார் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார். இதை கண்டித்து கும்பகோணம் காந்தி பார்க் முன் கமலின் உருவ பொம்மையை எரிப்பதற்காக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்றோம். அப்போது கிழக்கு காவல் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் எங்களை தடுத்தனர். இதனால் கமலின் உருவ பொம்மையை எரிக்க முயன்றோம். அப்போது என்னையும், மற்ற நிர்வாகிகளையும் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சட்டையை பிடித்து அடித்து இழுத்து கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கினர்.

சட்டத்திற்கு புறம்பாக எங்களை ரவுடிகளைபோல கையாண்டுள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம், கஞ்சா, போதைப்பவுடர் விற்பனை நடப்பதால் ஏற்கனவே இருந்த எஸ்பி செந்தில்குமாரிடம் புகார் மனு கொடுத்தேன். அதன் காரணமாக என் மீது முன்விரோதம் கொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் ஈடுபடுகிறார். எனவே எங்களை தாக்கி அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: