100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு ஒன்றிய அலுவலகங்கள் முன் ஜூன் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் விவசாய தொழிலாளர் சங்கம் முடிவு

பெரம்பலூர், மே 22: நூறு நாள் வேலைத்திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றிய அலுவலகங்களின் முன் ஜூன் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க பயிற்சி வகுப்பில் முடிவு செய்யப்பட்டது. பெரம்பலூர் துறைமங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் காசிராஜன் வரவேற்றார். இதில் சங்க வளர்ச்சியும் நமது பணிகளும் என்ற தலைப்பில் நடந்த முதல் அமர்வுக்கு மாவட்டக்குழு உறுப்பினர் தேவகி தலைமை வகித்தார். மாநில செயலாளர் சின்னதுரை சிறப்புரையாற்றினார். 100 நாள் வேலைத்திட்ட அமலாக்கம், சட்டவிதிகள் மற்றும் அரசு உத்தரவு குறித்த 2வது அமர்வுக்கு மாவட்டக்குழு உறுப்பினர் மதுரைவேணி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பக்கிரிசாமி சிறப்புரையாற்றினார்.

பின்னர் நடந்த அரசு நலத்திட்டங்கள், தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த 3வது அமர்வுக்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஞானசவுந்தரி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வாசு சிறப்புரையாற்றினார். அதன்பிறகு நடந்த உழைப்பாளிகளின் நலன் காப்போம் குறித்த முதல்அமர்வுக்கு மாவட்டக்குழு உறுப்பினர் வீரசிங்கம் தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்க மாநில செயலாளர் கருணாகரன் சிறப்புரையாற்றினார்.

எதிர்கால கடமை குறித்த 2வதுஅமர்வுக்கு மாவட்ட துணை செயலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். இந்த பயிற்சி முகாமில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தில் தற்போதுள்ள 10025 உறுப்பினர்கள் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்துவது.  ஜூன் 4ம் தேதியன்று பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஒன்றிய அலுவலகங்கள் முன்பு 100 நாள் வேலை வழங்கும் படியும், அத்திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது. பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். தமிழக அரசின் வருவாய்த்துறை வீட்டுமனை பட்டாக்களை வழங்குவதற்கு பிறப்பித்த காலக்கெடுவை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: